#1827 to #1830

#1827. அஞ்சலியோடு அர்சிப்பீர்

மஞ்சனம், மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சு அமுதாம், உபசாரம் எட்டு எட்டொடும்
அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே.

திரு மஞ்சனம், மலர் மாலைகள், வானவர் நெஞ்சம் இவற்றினுள் ஈசன் உறைந்து விளங்குவது ஏன்? தேவர்கள் பூலோக பக்தர்களுடன் கலந்து கொண்டு, பஞ்ச கவ்வியத்துடனும், பதினாறு விதமான உபசாரங்களுடனும், அஞ்சலியோடும், ஈசனை அன்போடு தொழுவதே இதன் காரணம்.

#1828. புண்ணியருக்குப் பூ உண்டு

புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள் புரி யாநிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகினன் றாரே.

புண்ணியச் செயல் ஆகிய சிவ பூசை செய்பவர்களுக்கு ‘ஊர்த்துவ காமினி’ என்னும் மேல் நோக்கிச் செல்லும் உணர்வு உண்டு. சுவதிட்டான மலரும் உண்டு. சிவன் இவ்வாறு பூசிப்பவர்களுக்கு அருள் தருவான். எண்ணற்ற பாவிகள் சிவனைச் சிந்தியாமல் அவமே தம் வாழ்நாட்களைக் கழிக்கின்றனரே!

#1829. முத்தியாம் என்பது மூலன் மொழி

அத்தன் நவதீர்த்த மாடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தவர் பதத்தைச்
சுத்தம தாகவே விளங்கித் தெளிக்கவே
முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.

நவ தீர்த்தம் என்னும் ஒன்பது நிலைகளில் சிவன் ஆடித் திளைக்கும் தன்மையைக் கேட்பீர்! உயர்ந்த மெய்யறிவு பெற்று விட்ட தூயவர்களின் பாதங்களைக் கழுவி, அந்த நீரைத் தன தலையில் தெளித்துக் கொண்டவருக்கு, உயரிய முத்தி கிடைக்கும் என்பது மூலன் வாக்கு.

#1830. உன்னை மறவா வரம் தருக!

மறப்புற்று இவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப் பெற வேண்டும் அமரர் பிரானே.

அமரர் பிரானே! அறிவு பூர்வமாக இல்லாமல் நான் உலக வழிப் படுவேன் ஆயினும் எனக்கு நீ ஒரே ஒரு வரம் தருவாய். சிறப்பான பூவையும், நீரையும் ஏந்திய வண்ணம் நான் மறவாமல் உன்னை என்றும் வழிபடும் வரம் தருவாய்.