#1877 to #1880

#1877. கணிந்தாரைக் கைவிடலாமோ?

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதி பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.

“இவனே என் இறைவன்!” என்று உறுதியாக அவனைப் பணிபவரின் உள்ளத்தில் அவன் வந்து உறுதியாகப் பொருந்துவான். தன்னை உறுதியாக வணங்குபவரின் உள்ளக் கிடக்கைகளை அவன் உறுதியாக நிறைவேற்றுவான். தன்னை ஓர் அணிகலன் போல எப்போதும் உள்ளத்தில் இருத்திக் கொண்டும், தன்னையே இடையறாமல் நினைத்துக் கொண்டும் உள்ள ஓர் அன்பனை அவனால் கைவிட முடியுமா?

#1878. பொன்னுலகு ஆளும் பலம்

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலமிசை நீக்கிய பொன்னுலகு ஆளும்
பலம் இசை செய்யும் படர் சடையோனே.

தாழ் சடை நந்தியின் தாள்களை தம் தலை மேல் வைத்துத் தொழுகின்றனர் அமரர்கள். அவன் என்னைப் பார்மிசைப் படைத்துப் பணித்தான் தன் மெய்ப் பணியைச் செய்திட. அவன் என்னை மேலும் மேலும் உயர்த்துவான். ஊன் உடல் உணர்வுகளை நீக்கி எனக்குப் பொன்னுலகு ஆளும் பலனையும் தருவான் அந்தப் படர் சடை உடைய சிவபெருமான்.

#1879. புனல் மூழ்க மாதவமே

அறியாப் பருவத்து அரன் அடியாரைக்
குறியால் அறிந்து, இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடை முடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவ மாமே.

அறியாத இளம் பருவத்திலேயே நான் சிவன் அடியாரை, அவர்கள் அணிந்துள்ள கோலத்தால் அறிந்து கொண்டேன். அவர்களுக்கு நான் அடிமை ஆனேன். அதில் ஆனந்தம் அடைந்தேன். அந்தச் சிவனடியார் உலகில் வாழ்ந்திருந்தாலும், உலகைக் குறித்து சிந்தனை செய்யார். சிவக்கோலம் பூண்டு உலகில் அவர்கள் நடந்த போதிலும், அவர்கள் சிந்தனை சிவனைக் குறித்த நினைவுக் கடலில் மூழ்கி இருக்கும். இதுவே அவர்கள் செய்யும் மாதவம் ஆகும்.

#1880. அணுகி அன்பு செய்வர்

அவன்பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்;
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பால் பெருமை இலயம் அது ஆமே.

தன்னிடம் அன்பு செலுத்துபவர்களைச் சிவனிடம் மேலும் நெருங்கி அணுகும்படிச் செய்யும் வல்லமை படைத்தவர்கள் சிவன் அடியார்கள். ஒருவன் சிவன் அடியாரை அணுகி அவரிடம் அன்பு செலுத்தினால், அந்தச் சிவனடியாரின் ஏற்றமும் பெருமையும் இவனுக்கும் வந்து சேரும்.